மை அவாம் குவளை எல்லாம் - கருமையை விரும்புகின்ற குவளை மலர்கள் யாவும்; மாதர் கண்மலர்கள் பூத்த - அம்மகளிரின் கண்மலர்களைப் போலப் பூத்தன; உருவத்தார் தம் கை அவாம்கண் - அழகினையுடைய அம்மகளிரின் உள்ளங்கைகளைப்போல் பெரிதாக விரும்பிய அவர் கண்கள்; மலர்க் குவளை பூத்த - மலர்ந்துள்ள குவளைகளைப் போல விளங்கின; செய்ய தாமரைகள் எல்லாம் - செந்தாமரை மலர்கள் எல்லாம்; தெரிவையர் முகங்கள் பூத்த - மங்கையரின் முகங்களைப் போலப் பூத்தன; தையலார் முகங்கள் - அம்மாதர்களுடைய முகங்கள்; செய்ய தாமரை பூத்த - செந்தாமரை மலர்போல் விளங்கின. குவளைகள் மாதர் கண் போன்றவையாயினும். அஞ்சன மை அவற்றிற்குக் கிட்டா ஆதலின். “மை அவாம் குவளை எல்லாம்“ என்றார். அவாம் அவாவும்; விரும்பும். செய்யும் என்னும் எச்சம். மகளிர் கைகள். முகங்கட்குப் பூத்தல் என்பது விளங்கல் என்னும் பொருளது. இவற்றிற்கு வேறே உவமைகள் கிடையா; ஒன்றற்கொன்றே உவமையாம் எனச் சிறப்பித்தவாறு. மகளிர் கண்கட்கு உள்ளங்கை உவமை!” குடங்கை போல் உண்கண்” (சீவக. 342) “ஒல்கிப் போய் மாடம் சார்ந்தார் ஒரு தடங்குடங்கைக் கண்ணார்” (சீவக. 2535) இங்ஙனம். உவமையையும். பொருளையும் ஒன்றற்கு ஒன்று உவமான உவமேயங்களாகச் சொல்வதைப் புகழ் பொருள் உவமை என்பர் அணிநூலார். 3 |