இது முதல் எட்டுக்கவிதைகள் ஒரு தொடர்: தாளை ஏய் கமலத்தாளின் - தண்டுபொருந்திய கமல மலரில் வாழும் திருமகளைப் போல; மார்புறத் தழுவுவாரும் - (தங்கள் கணவன்மாருடைய) மார்பகங்களை அழுந்தத் தழுவி நிற்பவர்களும்; தோளையே பற்றி - (தங்கள் கணவர்களுடைய) தோள்களையே பிடித்துக்கொண்டு; வெற்றித்திரு எனத் தோன்றுவாரும் - வெற்றித் திருமகளைப் போலத் தோற்றம் அளிப்பவர்களும்; பாளையே விரிந்தது என்ன - பாளைகள் விரிந்தாற்போல; நீர்பரந்து உந்துவாரும் - நீர் பரக்குமாறு (கரங்களால்) நீரை வீசுபவர்களும்; வாளைமீன் உகள அஞ்சி - வாளை மீன்கள் துள்ளுதற்குப் பயந்து; மைந்தரைத் தழுவுவாரும் - தத்தம் கணவன்மார்களைத் தழுவிக்கொள்பவர்களும். நீர் பரந்து - நீர்பரக்க - எச்சத்திரிபு. பல திருமகள்களும். திருமால்களுமாகத் தோன்றின நீர்நிலைகள் என்றவாறு. பிரிந்தறியாதவர்கள் ஆதலால். வாளை மீன்கள் துள்ளுவதைச் சாதகமாக்கிக் கொண்டு கணவன்மார்களைத் தழுவிக்கொண்டனர் என்க. திருமகள் மார்பிலும். வெற்றிமகள் தோளிலும் உறைபவர் ஆதலால் மார்பில் தழுவியோர்க்கும். தோளைத் தழுவியோர்க்கும் அவ்விருவரும் உவமையாயினர். நீரைப் பரவலாக இறைக்கும்போது பாளை விரிந்தாற்போலத் தோன்றுவதை. நுனித்துணர்ந்து. “பாளையே விரிந்தது என்ன நீர் பரந்து உந்துவாரும்” என்றார். கணவரைத் தழுவிக்கொள்ள அமயம் பார்த்திருப்பார்க்கு. வாளை மீன் உதவிற்று என்பார். “வாளை மீன் உகள அஞ்சி மைந்தரைத் தழுவுவாரும்” என்றார். பெண்மையின் இயல்புப் பண்புகளில் நான்கில் ஒன்றான அச்சச் சிறப்பும் அறிவித்தார். 4 |