பக்கம் எண் :

  நீர்விளையாட்டுப் படலம்601

948.ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்றுஅரோ! -
தேனும். நாவியும். தேக்கு. அகில் ஆவியும்.
மீனும். நாறின; வேறு இனி வேண்டுமோ?
 

ஆன தூயவரோடு- தூய்மையான  ஞானியரோடு; உடன் ஆடினார்
-  கூடியிருந்து பழகியவரும்;  ஞான  நீரவர் ஆகுதல் நன்று - நல்ல
ஞான  குணத்தையுடையவர்  ஆவது  தக்கது.   (அதுபோல); மீனும் -
(அம்மகளிர்  நீராடிய   நீர்நிலைகளில்   உள்ள)  மீன்களும்;  தேனும்
நாவியும் தேக்கு அகில் ஆவியும் நாறின
- தேன் மணமும். கத்தூரி
மணமும்.  தேக்கின்  புகை  மணமும்  அகிலின்  புகை மணமும் வீசல்
ஆயின;  வேறு  இனி வேண்டுமோ?  (இக்கருத்தை  விளக்க) வேறு
உவமையும் இனிவேண்டுமோ? (வேண்டா என்க.)

அரோ     - அசை - வேற்றுப்  பொருள்  வைப்பணி.  “தெருண்ட
மேலவர்.   சிறியவர்ச்   சேரினும்  அவர்தம்   மருண்ட   தன்மையை
மாற்றுவர்”   (கம்ப.   820)   என   முன்பும்  கூறினார்.   பெரியோர்
சிறியோரைச்  சேரின்.  சிறியோரைப்  பெரியோர்  ஆக்க   வேண்டும்;
அவரே  பெரியோர்.  “கல்லாரே யாயிடினும் கற்றாரைச்   சேர்ந்தக்கால்
நல்லறிவு   நாளும்   தலைப்படுவர்”   (நாலடி.   139)    “செய்யரைச்
சேர்ந்துள்ளோரும்  செய்யராய்த்  திகழ்வர்  அன்றே”    (கம்ப.  1125).
“கலக்கினும்  தண்  கடல்  சேறாகாது”  (நறுந்  தொகை)   என்பனவும்
காண்க.  கெட்ட  மணம்  போகாத இயல்புடைய ஒரு   பொருள் (மீன்)
அக்கெட்ட   மணமும்  போய்  நன்மணமும்  பெற்றது   எனக்  கூறி.
அம்மகளிரின்  மேனிச்  சிறப்புக்  கூறியவாறு.  “முறிமேனி.    முத்தம்.
முறுவல். வெறி நாற்றம். வேல் உண்கண். வேய்த் தோளவட்கு”  (திருக்.
1113) என்பான் வள்ளுவக் காதலனும்.                         20
 

949.

மிக்க வேந்தர்தம் மெய் அணி சாந்தொடும்
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்.
ஒக்க. நீல முகில்தலை ஓடிய
செக்கர் வானகம் ஒத்தது. அத் தீம் புனல்.

 

மிக்க   வேந்தர் தம் -  மிகுதியாக வந்த வேந்தர்களுடைய; மெய்
அணி  சாந்தொடும்  
-  உடம்பில்   அழகு  செய்த  செஞ்  சந்தனக்
குழம்போடும்;   புக்க   மங்கையர்   -    அவ்வேந்தரோடு   வந்த
மங்கையருடைய;  குங்குமம்  போர்த்தலால்  -   குங்குமக்  குழம்பும்
(தன்னிடத்தே)  நிரம்பியதனால்;  அத் தீம் புனல் -  அந்த இனிய நீர்
வெள்ளம்; நீல முகில் தலை ஒக்க ஓடிய - கருநிற  மேகங்களில் ஒரு
சேரப்   பரவிய;   செக்கர் வானகம்  ஒத்தது  -   செவ்வானத்தைப்
போன்றது ஆயிற்று.

சார்ந்ததன்     வண்ணம் ஆதல் உயிர்க்கு  இயல்பு என்பர்;  இங்கு
நீர்க்கும்  இயல்பு  ஆயிற்று  எனச்  சுவையுறக்  கூறினார்.  ஒக்க ஓடிய
எனக்  கூட்டுக.  நீர்.  நீல  வானிற்கும்.  மகளிர்  மைந்தர்  நீராடலால்
கரைந்து   கலந்த   செஞ்சாந்தும்  குங்குமமும்  அந்திச்    செவ்வான
மேகத்திற்கும் உவமைகள் ஆயின.                             21