பசுஞ் சாந்தினால் - ஈரம்மிக்க சந்தனக் குழம்பினால்; பாய் அரித்திறலான் - பாயும் சிங்கத்தினைப் போன்ற ஆற்றல் மிக்கான் ஒருவனுடைய; தூய பொன் புயத்து - தூய்மையுடைய பொன் அணிகள் பூண்ட தோள்களிலே; பொதி தூக் குறி - தான் எழுதிய தூய தொய்யில் கோலம்; மீ அரித்து விளர்க்க - (நீர்) மேலே பட்டு அழிந்துவிட்டதனாலே (தோள்) இயல்பான நிறம்பெற; ஒர் மெல்லியல் - அது கண்டு ஒரு மென்மைத் தன்மை கொண்ட ஒருத்தியின்; சேய் அரிக் கருங் கண்கள் சிவந்த - செவ்வரி படர்ந்த கருங் கண்கள் (சினத்தால்) சிவந்து போயின. தான் புனைந்த கோலம் அழிந்தது நீரால் என நினையாது. இன்னொருத்தியின் தோய்வால் என நினைந்து அவள் வெகுண்டாள் என்க. ஆடவனின் தோள்களில் இருந்த செஞ்சாந்துக் குழம்பு நீங்க இவள் கருங்கண்கள் சிவப்பாயின என நயந் தோன்றக் கூறினார். தான் தொடும் மார்பு; இதுவரையிலும் யாரும் தொடாதது. தான் பொன் போல் பாதுகாத்து வருவது என்பாள். “தூய பொன் புயத்து” என்றாள். இத்தகைய தன் பொற் புதையலை யார் தொட்டார் என்பதே கருங்கண்கள் சிவக்கக் காரணம். தூக்குறி மீ அரித்து விளர்க்க. கண்கள் சிவந்த(ன) என முடிக்க. 23 |