காமத்தால் வெதும்புவாள் - காம வெப்பத்தால் வெதும்புகின்றவளும்; நிதம்ப பாரத்து ஓர் நேரிழை - நிதம்பச் சுமையைத் தாங்கியவளும் அழகிய அணிகளை அணிந்தவளும் ஆன ஒருத்தியின்; உடல் வெப்பம் வெதுப்ப - உடம்பின் (காம) தாபம் சுட்டதனால்; கதம்ப நாள் விரை கள்ளவிழ் தாதொடு - பல்வகை மணப்பொடிகள் கொண்டவையும். அன்று மலர்ந்தவையும் மணங் கூடியனவுமாகி. தேன் சிந்தும் மகரந்தங்களோடும்; ததும்பு பூ - நிரம்பியுள்ள மலர்களைக் கொண்ட; திரைத் தண்புனல் - அலையடிக்கும் (அந்தக்) குளிர்ந்த நீர்த் தடாகமும்; சுட்டது - வெப்பம் மிக்கதாய்ச் சுட்டது. நேரிழை: அன்மொழித் தொகை. “நீருட் குளிப்பினும் காமம் சுடும்; குன்றேறி ஒளிப்பினும் காமம் சுடும்” (நாலடி. 90). ஆதலால். மலர்களால் குளிர்ந்த ஒரு பெரும் நீர்த்தடாகம். ஒருத்தி வெப்பத்தால் கொதித்தது எனக் காம நெருப்பின் தீமை தெரிவித்தவாறு. காமத்தைத் தீ எனக் கூறுதல் மரபு. “நீங்கில் தெறூஉம். குறுகுங்கால் தண் என்னும் தீ யாண்டுப் பெற்றாள் இவள்?” (திருக். 1104) என்பார் வள்ளுவனாரும். 24 |