நளினம் ஏறிய - தாமரை மலர்கள் மேல் ஏறியிருந்த; நாகு இள அன்னம் - மிக்க இளமை வாய்ந்த அன்னப் பறவைகள்; சுளியும் மென் நடை - (நாம்) பகைக்குமாறு. நம் மெல்லிய நடையினையும்; தோற்க நடந்தவர் - தோற்றுப் போம்படி நடக்கின்ற இம்மகளிரின்; ஒளி கொள் சிறுஅடி ஒப்பன ஆம் என - ஒளியுடைய சிறிய அடிகளை (இவை) ஒத்திருக்கின்றனவாம் என்று எண்ணியதனால்; விளிவு தோன்ற - (தம் மனத்திலுள்ள) கடுங்கோபம் வெளிப்படுமாறு; மிதிப்பன போன்றன - (அத் தாமரை மலர்களைத் தம் கோபம் தீர) காலால் மிதிப்பவற்றைப் போன்றிருந்தன. பகைவரை வெல்ல இயலாது போயின். அவரோடு தொடர்புடையாரையும் வெறுத்து ஒறுக்கும் மன இயல்பினையுணர்ந்த கவிஞர் தம்மை நடையழகால் வென்ற மகளிர்க்குத் தாம் இயற்றலாகும். தீமை ஒன்றும் இல்லாமையால். அன்னப் பறவைகள் அம்மகளிரின் அடியிணைகளை ஒத்த தாமரை மலர்களைத் தம் ஆத்திரம் தீர மிதிப்பன போலத் தாமரை மலர்கள் மேலிருந்து தம் கால்களால் மிதித்தன என்றார் - தற்குறிப்பேற்ற அணி. 26 ஆடவர் வேட்கை |