பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்609

18. உண்டாட்டுப் படலம்

தசரதனது  சேனை  மதுவினை  உண்டு  மகிழ்ந்தாடுகிற நிகழ்ச்சிகள்
கூறும் பகுதி:

நிலா     எழுந்ததால்  அதன்  தண்  ஒளி எங்கும் பரவுகிறது. அத்
தண்ணொளியில்  காமனின்  ஆட்சி   விரவுகிறது.  மகளிர் மதுவினைப்
பருகிக்  காமத்தழலுக்கு  நெய்  வார்க்கின்றனர்.   மது   மயக்கம்  பல
மயக்கங்கட்குக்   காரணம்   ஆகிறது.   ஊடலும்   கூடலுமாக   இரவு
கோலாகலமாகக்  கழிகிறது.  திங்கள்  மறைகிறான்.   காலைக்  கதிரவன்
எழுகிறான்.

                          எங்கு நிலாப் பரந்து பெருகிய தோற்றம்
 

962.

வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்.
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்.
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்.
தண் நிறை நெடு நிலாத் தழைத்தது. எங்குமே.

 

வெண்     நிற நறைநிறை - வெண்மையான நிறமுடைய கள்ளின்;
வெள்ளம்  என்னவும்  
-  நிறைந்த வெள்ளம் (பெருகியது) போலவும்;
பண்நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்
- இசையானது வடிவம்
பெற்று  உலகத்தில்  இடையே  பரவியது போலவும்; உள் நிறை காமம்
மிக்கு   ஒழுகிற்று  என்னவும்   
-   (எல்லா   உயிர்  இனங்களின்)
உள்ளத்துள்ளே  நிரம்பிய  காமம்  (உள்அடங்காமையால்) மிகுதிப்பட்டு
வெளியிலே  ஒழுகினாற் போலவும்; தண்நிறை நெடுநிலாத் தழைத்தது
எங்கும்  
-  குளிர்ச்சி   பொருந்திய பெருநிலாவானது எல்லாவிடத்தும்
(தன் ஒளியைச் செழிக்கச் செய்தது).

நிறத்தால்     கள்;    இனிமையால்   இசை;   இன்ப   மிகுதியால்
காமவெள்ளம்  என்னலாம்படி  நிலவொளி   பரவிற்றென்க.  இனிவரும்
இப்படலப்  பகுதியின்  பொருள்  எல்லாம்   தோன்றுமாறு தொகுத்துத்
தோற்றுவாய் கூறினார்.                                        1
 

963.கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய். பிரிந்து
உலர்ந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய். உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்.
மலர்ந்தது. நெடு நிலா - மதனன் வேண்டவே.