கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய் - (ஆணும் பெண்ணுமாகக்) கூடி மகிழ்ந்திருப்பவர்கட்கு இனிமை நல்கும் மதுவாகவும்; பிரிந்து உலர்ந்தவர்க்கு உயிர் விடு விடமும் ஆய் - (துணைவரைப்) பிரிந்து வருந்துவார்க்கு (உண்டார்) உயிரைப் போக்கவல்ல நஞ்சாகவும்; உடன்புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய் - துணைவருடன் ஊடல் கொண்டவர்க்கு (இன்ப நிலையை மிகுவிப்பதால் ஊடல் நீங்கிக் கூடல் கொள்ள) உதவி செய்கின்ற புதிய தூதுவன் ஆகவும்; மதனன் வேண்ட - மன்மதன் (தன் தொழிலுக்கு உதவுமாறு) வேண்டியதனால்; நெடுநிலா மலர்ந்தது - ஒளிமிக்க நிலவானது வானில் ( ஒரு வெண்மலர் போல) மலர்ந்தது. காம வேளின் பணிக்கு இரவும் நிலவும் பெரிதும் வேண்டப் படுவதாதலின் “மதனன் வேண்ட நெடுநிலா மலர்ந்தது” என்றார். ஒரு பொருள் மக்கள் மனநிலைக்கேற்ப பல்வகைப் பயன்தரும் என்கிறார். நிலா. கூடுவார்க்கு மேலும் மேலும் கூடும் விருப்பம் உண்டாக்கும் ஆதலின் மேலும் மேலும் உண்ண விருப்பம் ஊட்டும் கள் ஆகவும்; பிரிந்தவர்க்கு. விடம்மேலும் மேலும் உயிரை நெருக்குவதுபோல் நிலா உயிரை நெருக்குதலால் நஞ்சு ஆகவும்; ஊடியவர்க்கு வேட்கை மிகுவித்துக் கூட உந்துதலால் நிலா. ஒரு புதிய தூது ஆகவும் ஆயிற்று. பாணன் பாடினி. தோழியர் இருக்கவும். இது. அவரினும் மிகு நெருக்கும் தூது ஆதலின் “புதிய தூதும் ஆய்” என்றார். 2 |