அச்ச நுண் மருங்குலாள் - (இது முறிந்து விடக்கூடும் எனக் கண்டார்) அஞ்சுமாறு நுண்ணிய இடையினையுடையவளாய்த் தெய்வப் பெண் போன்றிருக்கும் ஒருத்தி; அளகபந்தி. நச்சுவேல் கருங்கண் செவ்வாய் நகைமுகம் - (தன்) கூந்தல் தொகுதியும் நஞ்சு பூசிய வேல் போன்ற கருங்கண்களும். சிவந்தவாயும். நகையோடு கூடிய முகமும்; மதுவுள் தோன்ற - பருகும் வள்ளத்து மதுவில் பிரதி பிம்பமாய்த் தோன்ற; பிச்சிநீ என்செய்தாய் - பித்துப் பிடித்தவளே! நீ என்ன செய்கிறாய்; இப்பெரு நறவு இருக்க - இதோ இச்சாடியில் பெரிய அளவில் மது நிறைந்திருக்க; வாளா எச்சிலை நுகர்தியோ - வீணே வள்ளத்தில் நான் உண்ட எச்சில் மதுவையா நுகர்கின்றாய்; என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் - என்று (இவள் நிழலை வேறொரு பெண்ணாகக் கருதி) பற்களாகிய முல்லை அரும்பு வெளித்தோன்றி ஒளிரச் சிரித்தாள். மது வுண்பார் நிழலையும் உருவையும் பிரித்தறிய இயலாதவர் ஆவார் என்றபடி. மிகுந்த கள்ளிருக்கவும். உண்டு எஞ்சிய எச்சிலையா உண்பது? என்று கேட்டு. இது பித்தாவார் குணம் ஆதலின் “பிச்சிநீ” என்றாள். அவளைப் பிச்சி என்னும் இவளும் நிழலை உண்மை உருவென்று நினைந்து பேசும் பிச்சி என்பது அறியாள். மதுவுண்பார் தன்பிழையுணராது பேசும் தகவை அழகுற இயம்பியுள்ள அருமையை உணர்க. 11 |