பக்கம் எண் :

616பால காண்டம்  

வேறு  ஓர் மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் - கொடுமை
திகழும்    கொலைத்     தொழிலைச்    செய்யும்   வேல்   போன்ற
கண்ணினையுடைய வேறு ஒரு மங்கை; மணியின் வள்ளத்து வெள்ளை
நிலாக் கற்றை பாய
- (தான் ஏந்திய) மணிகள் பதித்த (பளிங்கு மதுக்)
கிண்ணத்தில் வெள்ளை நிற  நிலாக்கதிர்கள் பாய்ந்ததனால்; நிறைந்தது
போன்று    தோன்ற   
-   (அந்தப்   பளிங்குக்   கிண்ணம்   மது)
நிறைந்திருப்பது   போலத்   தோன்றியதனால்;  நறவு  என  அதனை
வாயின்  வைத்தனள்
-  மதுவென்று கருதி. அக் கிண்ணத்தை வாயில்
வைத்தாள்; புறம் எலாம்  நகைசெய்து ஏச நாண் உட்கொண்டாள் -
பக்கத்தில்  உள்ளவர்கள்  எல்லோரும்   (வெறுங்  கிண்ணத்தை இவள்
வாய்   வைத்து   உறிஞ்சுவது   கண்டு)   நகைத்து    இகழ.  தானும்
தன்னுள்ளே நாணம் (மிகக்) கொண்டாள்.

மது    உண்ணா முன்னமே. அதன் நினைவுகூட மயக்கம் செய்விக்க
வல்லது   என்றவாறு.   புறம்   எல்லாம்   நகை   செய்யவும்.  தானும்
வெட்கமுறவும்    செய்ய    வல்லது    மது     விருப்பம்     என்று
நிகழ்ச்சியொன்றின்    வாயிலாய்     உணர்த்தினார்.     கொலைவேற்
கருவியிருந்தும்  நாணம்   தவிர்க்க    இயலாதாயிற்று.    நறவு   உட்
செல்லுமுன் நாணம் உட்சென்றது என்றுரைத்த நயம் காண்.க.        12
 

974.‘யாழ்க்கும். இன் குழற்கும். இன்பம்
   அளித்தன இவை ஆம்’ என்ன
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர்
   கிஞ்சுகம் கிடந்த வாயாள்.
தாள் கருங் குவளை தோய்ந்த
   தண் நறைச் சாடியுள். தன்
வாள்-கணின் நிழலைக் கண்டாள்;
   வண்டு என ஓச்சுகின்றாள்.
 

யாழ்க்கும் இன்குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன
-   வீணையின்   இசைக்கும்.  இனிய  குழலிசைக்கும்  (இசை)  இன்பம்
கொடுத்தவை   இவள்  சொற்கள்தாம்  என்னுமாறு;  கேட்கும்  மென்
மழலைச்  சொல் ஓர் கிஞ்சுகம்  கிடந்தவாயாள்  
- (இனிதான ஒலி)
கேட்கச்  செய்கிற   மெல்லிய   மழலை மொழியினையும். முருக்க மலர்
அனைய  சிவந்த  வாயினையும்  உடையாள்   ஒருத்தி; தாள் கருங்கு
குவளை   தோய்ந்த  தண்  நறைச் சாடியுள்  
-  தண்டினையுடைய
கருங்குவளை  மலர்  இடப்  பட்டுள்ள   குளிர்ந்த   கள்ளினையுடைய
சாடியின்  உள்ளே;  தன்  வாள்க(ண்)ணின்  நிழலைக் கண்டாள்  -
தன்னுடைய  வாள்போன்ற கண்களின் நிழலைப்  பார்த்தாள்  (நிழலென
அறியாது.);  வண்டென  ஓச்சுகின்றாள்  -  (உள்ளே  உள்ள குவளை
மலர்களில்  மது  வுண்ண  வந்த வண்டுகள்  என்று)   தன்கண்நிழலை
ஓட்டலானாள்!