ஒருத்தி - ஒருமங்கை; கள் மணி வள்ளத்துள்ளே - கள்ளினை வார்த்த அழகிய கிண்ணத்தின் உள்ளே; களிக்கும் தன்முகத்தைநோக்கி - கள் வெறி தோற்றும் தன் முகத்தின் பிரதிபிம்பத்தைக் கண்டு; விண்மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று உன்னி - வானத்துத் திங்கள் மதுவின் ஆசையால் கிண்ணத்துள். மது வுண்ண வந்து வீழ்ந்து கிடக்கிறது என்று நினைத்து; உள்மகிழ் துணைவனோடும் ஊடு நாள் - மன மகிழ்ச்சி நல்கும் என் கணவனோடு (நான்) ஊடல் கொள்ளும் காலத்து; வெம்மை நீங்கித் தண்மதி ஆகின் - (உன் இயல்புக்குமாறாக) வெப்பந் தருவதை நீக்கி. குளிர்ந்த நிலவாகவே நடந்து கொள்வாய் ஆனால்; இந்நறவைத் தருவென் என்றாள் - இம்மதுவை. (இப்பொழுது உனக்கு நல்குவேன் என்றாள்.) மது உண்பார்க்கு அனைவரும் தம்மைப் போன்றே மது உண்பவராகவே தோன்றுவர். மேல். 975-ஆம் பாடலில். பாம்புக்கு அஞ்சி வந்து ஒளித்த நிலாவாகத் தன் முக நிழலைக்கண்டாள். இங்கு. மதுவாசையால் வந்து ஒளிந்த நிலாவாகத் தன் முக நிழலைக் காண்கின்றாள். ஆபத்தில் இருப்பாரைக் காப்பாற்று முன். தனக்கு ஆம் செயல் புரிய உறுதிபெற நினைப்பது மக்கள் இயல்பாதலின். “ஊடு நாள்.... தண்மதி ஆகின் தருவென்” என்றாள். 17 |