எள் ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி - எள்ளுப் பூப்போன்ற அழகிய மூக்கினையுடையாளாய் அணிகலம் பூண்டாள் ஒருத்தி; முன்கை தள்ளத் தண்நறவையெல்லாம் - முன்னங் கை நடுங்கியதனால் குளிர்ந்த மது முழுவதும்; தவிசு இடை உகுத்தும் தேறாள் - (தன்) ஆசனத்திற் சிந்திவிட்டதை; தேறாள் - (சிறிதும்) உணராதவளாய்; உள்ளத்தின் மய்ககம் தன்னால் - மனத்தின் உள்ளே உள்ள மதுவின் மயக்கத்தினால்; உப்புறத்து உண்டு என்று எண்ணி - மதுக்கிண்ணத்தின் பின்புறத்தில் மது இருக்கும் என்று கருதி; வள்ளத்தை மறித்து வாங்கி - மதுக்கிண்ணத்தைக் கீழ்மேலாகக் கொண்டு; மணி நிற இதழின் வைத்தாள் - பதுமராக மணி போன்ற தன் சிவந்த அதரத்தில் வைத்துக்கொண்டாள். கீழ்மேல் தெரியாது உழலும் மதுமயக்கின் அவலம் கூறியவாறு. முன் கை தள்ளத் தண் மதுவையெல்லாம் தவிசிடை உகுத்ததும் அவளுக்குத் தெரியாமைக்குக் காரணம் கண்மயக்கம்; கண் மயக்கத்திற்குக் காரணம் மது வுண்பார்க்கு வரும் உள் மயக்கம். அதனால். “உகுத்தும் தேறாள். உள்ளத்தின் மயக்கம் தன்னால்”. என்றார். மேலும். “மாயையின் மயங்குகின்றாம்; மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்” (கம்ப. 4358) என்பார். 18 |