ஒருமாது. சீற்றம்ஆம் அபிநயம் தெரிக்கின்றாரின் - ஒருபெண். வெகுளியுற்றோர் அபிநயம் (இது என்று தெரிந்து கொள்ளுங்கள் எனக்) காட்டுவாள் போன்று; கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப - (விரும்பாதார்க்கு) இயமனைப் போன்று துன்பம் செய்யும் இருவிழிகளும் (மது வேகத்தால்) சிவந்து போகவும்; கூன் நுதல் ஏற்றி - வளைவுகள் நெற்றியில் தோன்றுமாறு புருவங்களை (நெரித்து) மேல் ஏற்றி; வாள் எயிறுகள் அதுக்கி - ஒளியுடைய பற்களைக் கடித்து; இன்தளிர்மாற்று அருங் கரதலம் மறிக்கும் - கண்ணுக்கு இனிய தளிரின் அழகைத் (தமக்கு முன்னே தலையெடுக்க இயலாதவாறு போக்குகின்ற (அழகுடைய கைத்தலங்களை மடக்குவாள்.) மதுவுண்டால் நிகழும் மெய்ப்பாடுகளோடு வெகுண்டோர் மெய்ப்பாடுகள் ஒக்கும் என்பதால். அது வெறுக்கத்தக்கதென்று உணர்த்தியவாறு. வெகுண்டோன் அவிநயம். “மடித்த வாயும் மலர்ந்த மார்பும். துடித்த புருவமும். சுட்டிய விரலும். கன்றிய உள்ளமொடு கை புடைத்திருத்தலும்” (சிலம். மேற். அடியார். 3.12.)ஆம். 21 |