ஒருத்தி. ஊடினது தன் பாங்குளார்களோடு உரை செயாள்- ஒரு மங்கை. தான் தன் கணவனோடு பிணங்கியுள்ளதைத் தன் தோழியரோடு வாய்திறந்து சொல்லாதவளாய்; மாடகம் பற்றிய மகர வீணையை - முருக்காணி பொருந்திய மகரமீன் வடிவமைந்த வீணையினை; தன் தோடு அவிழ் மலர்க்கரம் சிவப்பத் தொட்டனள் - இதழ்கள் விரிந்த தாமரைப் பூப்போன்ற தன் கரங்கள் சிவப்புறும்படி தொட்டு; தன் உள்ளத்து உள்ளது பாடினள் - தன் உள்ளத்துள்ளே மறைந்த ஊடற் காரணங்களைத் (தன் கணவன் மட்டுமே குறிப்பால் உணர்ந்து கொள்ளுமாறு வீணையிலிட்டுப்) பாடினாள். தன் உள்ளத்துள்ளதைப் பாங்கிமார் அறியின். அவனைத் தூற்றுவர்; அதனை இவள்பொறாள் ஆதலின். “உரை செயாள்; பாடினாள்” என்றார். கணவன் குறையைப் பிறர் அறியாமல் பேணும் பெண்மையின் தனிப்பண்பு சுட்டினார். 32 |