ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் - பேரழகு அமைந்தவனான ஒருவன்; எய்தினன் - (பிரிவால் வருந்தும் தன் மனையாள் இருக்கும் பள்ளியறையை) அடைந்தான்;அனங்கன் வெங்கணை வேய்ந்த போல் எங்கணும் பாய்ந்து பூம்பள்ளியில் - மன்மதனது கொடுங்கணைகள் எங்கும் பரவிக் கிடப்பனபோல் மலர்கள் பரவிக் கிடந்த மலர்ப்படுக்கையில்;படுத்த பல்லவம் தீய்ந்தன நோக்கினன் - (அவள் சாய்ந்த போது) பரப்பிய தளிர்கள் அத்தனையும் கருகிப் போவதைப் பார்த்தான்; திகைக்கும் சிந்தையான் - (தன் பிரிவு பாதித்துள்ள அளவினை அறிந்து) திகைப்புற்ற மனமுடையோன் ஆனான். தன்னை அவன் பிரிவு எவ்வளவு பாதித்துள்ளது என்பதனைத் தளிர்களின் மேல் சாய்ந்து காட்டினள் என்க. வெப்பத்தைக் குறைக்க. படுக்கையில் பரப்பியுள்ள தளிர்கள் இவன் இல்லாத போது. காமன்விட்ட கணைகள் போன்றிருந்தன என்பார். “அனங்கன் வெங்கணை வேய்ந்த போல் பாய்ந்த பல்லவம்” என்றார். “எழிலினான் ஒருவன் எய்தினன்; பல்லவம் தீய்ந்தன நோக்கினன்; திகைக்கும் சிந்தையான்” எனக் காட்டுக. 38 |