நறைகமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர்- தேன் மணம் மிகுந்து அசைகின்ற மலர் மாலை சூடிச் செறிந்து மணம் வீசும் குடுமியினையுடைய ஆடவர்கள்; துறை அறி கலவி செவ்வித் தோகையர் தூசு வீசி - இன்பக் கலவையின் துறைகளையறிந்து பக்குவமற்ற மகளிரின் ஆடைகளை அப்பால் எறிந்துவிட்டு; நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழிந்து அகல நீத்தார் - (மேலும்) நிறைந்து அகன்ற இடைப் பகுதியைத் தழுவியிருந்த மேகலையென்னும் அணியையும் வெறுத்து அப்பால் வீசினர்; அறைபறை யனைய நீரார் - (ஏன் எனில்) (செய்திகளைக் கூவி) அறைகின்ற பறை போன்று (எப்போதும் வாய்விட்டுக் கத்தும்) தன்மையினர்; அருமறைக்கு ஆவரோ? - வெளிப்படுத்தக் கூடாத இரகசியச் செயல் நிகழ்கையில் உடன் இருக்கும் தகுதியுடையார் ஆவாரோ? (ஆகார்) தான் - அசை. “தாம் கேட்ட மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் அறைபறை யன்னர் கயவர்” என்னும் திருவள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் (1076) கருத்தை. பொன்னணியில் பதித்த நல் மணியாய்ப் பொதிந்து ஒளிரச் செய்துள்ளார் - வேற்றுப்பொருள் வைப்பணி. 56 |