பொரு அறு மதனன் போல்வான் ஒருவனும் - (அழகில் தனக்கு) உவமை சொல்ல ஒருவனும் இல்லாத மன்மதனைப் போல் வான் ஒருவனும்; பூவின் மேல் அத் திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் - (தாமரை) மலர் மேல் வாழும் மங்கையாகிய திருமகளுக்கு உவமிக்கத் தகுதியுடையாள் ஒருத்தியும்; சேக்கைப் போரில் - மஞ்சத்தில் நிகழ்ந்த கலவிப் போரிலே; ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் - ஒருவருக்கு ஒருவர் பின்னடையாமல் சமநிலையிலேயே (இன்பப் போர் புரிதலில்) இருந்தனர்; இருவரது உயிரும் ஒன்றே உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வர்- ஏன் எனில் இருவருக்கும் உயிரும் உணர்ச்சியும் ஒன்றேயாக இருக்கையில் யார் வெல்ல இயலும்? (யார் தோற்க இயலும்) உடல் அன்றி உயிர் ஆற்றலும் உணர்வாற்றலுமே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பன; அவை இரண்டும் இவ்விருவர்க்கும் சமம் ஆதலின். கலவிப் போரில் ஒருவர்க்கொருவர் தோற்காமல் போர் புரிந்தனர். ஒருவரும் தோற்க இயலாத போது ஒருவரும் வெற்றி பெறலும் இயலாது என்பார். “ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர்” என்றும். காரணம். “இருவரது உயிரும் ஒன்றே; உணர்வும் ஒன்றே என்றபோது யாவர் வெல்வார்?” என்றார். 58 |