கொள்ளைப் போர் வாட்கண்ணாள் ஒருத்தி- (உயிரை) கொள்ளை கொள்ளும் போரில் வழங்கும் வாள் போன்ற கண்ணினாள் ஒருத்தி; அங்கு ஓர் குமரன் அன்னான் வள்ளத்தார் அகலம் தன்னை - அங்கே. முருகக் கடவுளைப் போன்ற அழகினையுடையான் ஒருவன் வளம்மிக்க மாலையணிந்த மார்பினை; மலர்க்கையால் புதைப்ப நோக்கி - (அவள் ஊடலால் உதைப்பின் தன் மார்பில் அணிந்த மாலை அவர் அனிச்ச அடியை வருத்தும் என்று) தன் மலர் போன்ற கைகளால் மறைப்பதனைப் பார்த்து; உள்ளத்து ஆர் உயிர் அன்னாள் மேல் உதை படும் என்று - உம் உள்ளத்தில் கள்ளத்தால் வைத்திருக்கும் உயிர் அனையவள்மீது என் உதைபடும் என்று கருதி ; நீர்நும் கள்ளத்தால் புதைத்திர் என்று - மற்றொருத்தியைக் காக்கக் கை கொண்டு மறைத்தீர் என்று கூறி; முன்னையின் கனன்று மிக்காள் - முன்பைவிடக் கடுமையாக ஊடல் கூடினாள். “இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர் அளிக்குமாறு” எனும் அருமைத் திருக்குறட்கு (திருக். 1321) இலக்கியம் ஆயினான் இக்குமரன் என்க. அவன் செய்யும் அன்புச் செயல்களே அவள் இவன் ஊடல் மிகக் கொள்ள ஏது ஆயினமை காண்க. 59 |