மங்கையர் இளநலம் மைந்தர் உண்ண - மாதர்களுடைய புதிய இன்பத்தை ஆடவர் நுகர்கையில்; குங்குமம் உதிர்ந்தன - (மங்கையர் மார்புக்) குங்குமக் கோலங்கள் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன - கூந்தல்கள் அவிழ்ந்தன; சங்கு இனம் முரன்றன - (கையில் அணிந்திருந்த) சங்கு வளையல்கள் ஆரவாரித்தன; கலையும் சாறின - ஆடைகளும் நழுவின; சிலம்புகள் பொங்கின பூசல் இட்டன - காலில் உள்ள சிலம்புகள் மிகுந்து ஒலி செய்தன. ஒரு செயலுக்காக இத்தனை செயல்கள் நிகழ்ந்தன என வியந்தவாறு. மங்கையர் இளநலம் மைந்தர் உண்ண - குங்குமம் உதிர்ந்தன; கோதைகள் சோர்ந்தன; சங்கு இனம் முரன்றன; கலைகள் நழுவின; சிலம்புகள் பொங்கின; பூசல் இட்டன எனக் கூட்டுக. மைந்தர்கள் உண்பதற்காக மங்கையரிடத்தே இளமையும் நலமுமாகிய பெருவிருந்து படைத்து வைக்கப்பட்டுள்ளமையறிந்து துய்த்து மகிழ்ந்தனர் என்க. முதல் மூன்றடிகளிலும் ஒரு போர்க்களத்தின் சூழலைச் சுட்டினார் கலவிப் போர் ஆதலின். 63 |