காதல் - காதலானது; துனிஉறு புலவியை - துயர்மிகச் செய்யும் ஊடலை; சூழ் சுடர்பனி எனத் துடைத்தலும் - (கதிரவன்) சுற்றிப் பரப்பும் கிரணங்களால் பனியை அழிப்பது போல நீக்கி விட்டவுடன்; புனை இழை ஒருமயில் - அணிகள் அணிந்த மயில் அனைய ஒரு மங்கை; பதைக்குஞ் சிந்தையாள் - (ஊடல் நீங்கியவுடன் கூடத்) தவிக்கும் மனம் உடையவளாய்; பொய் உறங்குவாள் - (உடனே தழுவின் தன் பெருமை குன்றும் என்று) உறங்குபவள் போல் பொய்யாக உறங்கி; கனவு எனும் நலத்தினால் கணவற் புல்லினாள் - (அஞ்சத்தக்க கனவு கண்டவள் போல்)கனவு தரும் நல் உதவியினால் கணவனை இறுகத் தழுவிக் கொண்டாள். பள்ளியறையில் “கிழவோள் உயர்வு” (தொல். பொருள். 31) பாதிக்கப் படாதிருக்க நிகழும் சாகசங்களுள் ஒன்று சுட்டியவாறு. கதிரவன் பனியைத் துடைத்தல் போல் காதல் ஊடலைத் துடைத்தது. வலியத் தழுவின் பெண்மையின் உயர்வு தாழும் என்று. பொய் உறக்கம் கொண்டு. அதில் பொய்க் கனவும் கண்டு. அச்சக் கனவால் அணைப்பாள் போல் அணைத்து மகிழ்ந்தாள். 64 |