அருங்களி மால்களிறு அனைய வீரர்க்கும் - (தணித்தற்கு) அரிய மதமயக்கங் கொண்ட ஆண் யானைகளைப் போன்ற வீரர்கட்கும்; கருங்குழல் மகளிர்க்கும் - கரிய கூந்தலுடைய மகளிர்க்கும்; கலவிப் பூசலால் - (நிகழ்ந்த) கலவிப் போரில் மிதிபட்டதனால்; அம்மாலைக் கங்குல் நெருங்கிய வனமுலை சுமக்க நேர்கலா மருங்குல் போல் தேய்ந்தது - அந்த மயக்கந்தரும் இரவு (ஒன்றோடொன்று) நெருங்கியுள்ள அழகிய தனங்கள் சுமப்பதற்கு ஆற்றலற்ற (மங்கையர்) இடையினைப் போல் வரவரக் (குறைந்து) தேய்ந்து போயிற்று. மழ களிறு அனையார்க்கும் மயில் அனையார்க்கும் இடை நிகழ்ந்த கலவிப் போரில் இடையே சிக்கிய இரவு. “தேய்புரி பழங்கயிறு போல (நற். 284) மகளிர் இடையாய்த் தேய்ந்தது என்க. மாலைக் கங்குல். வீரர்க்கும் மகளிர்க்கும் கலவிப் பூசலால். வனமுலை சுமக்கலா மருங்குல் போல் தேய்ந்தது எனக் கூட்டுக - தற்குறிப்பேற்ற அணி. 66 சந்திரன் மறைவும் சூரியன் தோற்றமும் |