அறைந்த நெறி விடா புலமை - (இவ்விவ் வழிகள்) நீதி அமைந்தவை யென்று மறைகள் சொன்ன வழிகளை விடாமற்சென்று பின்பற்றும் (உயர்) ஞானத்தினையும்;செங்கோல் வெண்குடை வேந்தர் வேந்தன் - செங்கோலினையும். வெண் (கொற்றக்) குடையினையும் (தரித்த) வேந்தர்க்கு எல்லாம் வேந்தனாகிய தசரதச் சக்கரவர்த்தி; முக படாம் மலையில் தோன்றும் - முக படாத்தினையுடைய மலை போன்ற யானைகளிடத்திலிருந்தும் உண்டாகி; பருவம் ஒத்து அருவி பல்கும் - பருவகாலத்துக் கேற்ப அருவிகளாகப் பெருகுகின்ற; கடாம் நிறை ஆறு பாயும் - மத நீர் ஓடும் ஆறுகள் (தன்னிடத்தே) வந்து பாய்கின்ற; கடலொடும் கங்கை சேர்ந்தான் - (சேனையெனும்) சமுத்திரத்துடனே கங்கையாற்றின் கரையினை யடைந்தான். வேதம் செல்லத்தக்க நெறிகளை யுணர்த்துவது; அதுகாட்டும் செந்நெறியிலேயே சென்றவன் தயரதன் என்பதாம். கங்கை கடலைச் சேரும்; இங்கே. கடல் கங்கையைச் சேர்ந்தது என்பது ஒரு நயம். முதல் இரண்டடிகளிலும் வேதம் இன்னது என்பதும். அதனை விடாமற் பின் பற்றியதால். தசரதன் வெண்குடையும் செங்கோலும் ஞானமும் சிறந்து வேந்தர் வேந்தன் ஆயினான் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். பாயா வேங்கை. பறவாக் கொக்கு எனபது போல. யானையை முகபடாம்மலை என்றார். குறிப்புப் பொருள். 1 |