இருநிலக் கிழவன் ஆண்டு நின்று எழுந்து போகி - பெரிய நிலத்துக்குரியவனான தசரதன். அக் கங்கை நதியைக் கடந்து சென்று; அகன்பணை மிதிலை என்னும் - அகன்ற வயல்கள் சூழ்ந்த மிதிலை யெனும் பெயருடைய; ஈண்டு நீர் நகரின் பாங்கர் எய்த - நீர் வளம் மிக்க நகரத்தின் அருகில். சேர்ந்த அளவில்; தாண்டும்மா புரவித்தானை - பாய்வதில் பெருமையுடைய குதிரைப்படைகளையும்; தண்ணளிச் சனகன் என்னும் - (நெஞ்சில்) கருணையையும் உடைய சனகன் என்னும் பெயரிய; தூண்தரு வயிரத் தோளான் - தூண்களைப் போன்ற உறுதிமிக்க தோள்களையுடையவன்; செய்தது சொல்லல் உற்றாம் - செய்த செயல்களைச் சொல்லத் தொடங்குகிறோம். கவிக்கூற்று. வெளியே படைகளும்.. உள்ளே கருணையும் நிறைந்தான் எனச் சனகனின் வீரமும் ஈரமும் ஒரு சேரக் கூறியவாறு. 3 தயரதனைச் சனகன் எதிர்கௌ வருதல் |