இலைகுலாவு அயிலினான் அனிகம்- அரசிலை வடிவுடன் திகழும் கூரிய வேற்படையினை ஏந்திய தசரதனின் சேனைக்கு; ஏழ் என உலாம் - ஏழு என்னும் எண்ணிக்கை கொண்டனவாய்; நிலை குலாம் மகரநீர் நெடியமா கடல் எலாம் - நிலைபெற்று விளங்கும். சுறா மீன்கள் உலாவும். நீண்டு அகன்ற கடல்கள் யாவும்; அலகு இல் மா களிறு. தேர் புரவி. ஆள் எனை விராய் - அளவற்ற பெரிய யானைகளும் தேர்களும். குதிரைகளும். காலாட்களும் என்னும் நால்வகை வடிவுபெற்றுக் கலந்து; உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமை - உலகம் முழுவதிலும் பொங்கிப் பரவி வருவதே ஏற்றதோர் உவமையாகும். கணக்கிட இயலாமையாலும். ஆர்ப்பொலியாலும் கடலும் படையும் சமம் ஆயின என்க. “நிமிர்வதே” - ஏகாரம் பிரிநிலை. ஏழ்கடலும் நால்வகைச் சேனை வடிவம் பெற்று. உலகம் முழுவதிலும் பொங்கி மிதிலையை நோக்கி நகர்ந்தது என்பது தயரதன் சேனை வெள்ளத்திற்குப் பொருந்தும் உவமையாம் என்றார். தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. உயர்வு நவிற்சியுமாம். மகரம் - கடலில் மட்டுமே வாழும் சுறாமீன். “கடல் வாழ் சுறவும்” (தொல். மரபு. 41) என்பார் தொல்காப்பியனார். இது பற்றி. கடலுக்கு “மகராலயம்” எனும் ஒரு பெயர் வட மொழியில் உண்டென்பர். 6 |