வார்முகம் கெழுவு கொங்கையர் கருங்குழலின்- கச்சில் நிறைந்து வழியும் கொங்கைகளையுடைய மகளிரின் கரிய கூந்தலில் மொய்க்கும்; வண்டு ஏர் முழங்கு அரவம் - வண்டுகள் அழகாக ஒலிக்கும் ஓசை; ஏழ் இசை முழங்கு அரவமே - ஏழ்வகைச் சுரங்கள் ஒலிக்கின்ற இசையேயாகும்; தேர் முழங்கு அரவம் - (அச்சேனையில்) தேர்கள் ஒலிக்கின்ற ஓசை; வெண்திரை முழங்கு அரவமே- வெண்ணிறக் கடல் அலைகள் ஒலிக்கும் ஓசையே யாகும்; வெங்கரி முழங்கு அரவம் - வலிய யானைகள் பிளிறும் ஓசை; கார் முழங்கு அரவமே - கார்காலத்து (மேகங்கள் ஒலிக்கும் இடி) முழங்கும் முழக்கமே யாகும். “படை யியங்கு அரவம்” (தொல். புறத். 3) எனும் புறப் பொருளை நினைவில் கொண்டு. தசரத வேந்தன் படையில் இயங்கும் அரவங்களைப் பல்வகையாக ஒப்பிட்டு மகிழ்ந்தவாறு. மகளிரின் பெருந்தொகுதியும். யானை தேர்ப்படைகளின் மிகுதியும் கூறியவாறு. 9 |