மன்நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறை தர- அந்தச் சேனையில் மன்னர்களின் நீண்டகுடைகள் நெருங்கி. (அதனால்) வானம் முழுவதும் மறைபட; துன்னிடும் நிழல் வழங்கு இருள்துரப்பு எளிது - (அங்கு) நிறைந்த நிழலானது தருகின்ற இருட்டை ஓட்டுவது எளியதேயாம்; பொன் இடும் பூண்இடும் புனைமணிக் கலன் எலாம் மின் இடும் - (எங்ஙனமெனில்) பொன்னால் செய்யப்பட்ட அணிகளை இட்டு (அதன் மேல்) அழகிய மணிகளைப் பதித்த (அச்சேனையினர்) ஆபரணங்கள் எல்லாம் மின்னலைப்போல் ஒளிவிடும்; வில்இடும் - பன்னிற மணிகள் (தம்) ஒளிவீச்சால் வானவில் போல் பலநிற ஒளிகள் சிந்தும்; வெயில் இடும் - (சில மணியாபரணங்கள்) கதிரவனின் வெப்ப ஒளியை வீசும்; நிலவு இடும் - (சில மணியணிகள்) சந்திரனின் குளிர்ந்த ஒளிகளை உமிழும். ‘புவியிடும் “எனும் பாடத்திலும்” பூண் இடும்” எனும் பாடம் பொருட்சிறப்புடையது. இறுதியிரண்டடிகள் உயர் கவிகளுக்கேயுரிய சொல் இன்பச்சுவை பிலிற்றி நிற்றலை ஓதி யுணர்க. படையின் செலல். இருள் நீங்கி ஒளிமிகுவதை “எரிந்தெழுபல் படை”(கம்ப: 8329) எனும் பாடலிலும் உரைப்பார். 11 சனக மன்னன் வருகின்ற வழிக் காட்சி |