தாஇல் மன்னவர் பிரான் வர- குற்றமில்லாத மன்னர்க்கு மன்னனான தசரதச் சக்கரவர்த்தி. தனது நகரத்திற்கு வருகைபுரிகையில்; முரண் சனகனாம் ஏவரும் சிலையினான்- வலிமை மிகும் சனகனாகிய அரிய அம்புகள் தொடுக்கவல்ல வில் வீரனாகிய அரசன்; எதிர்வரும் நெறிஎலாம் - எதிர் கொண்டு அழைத்துவர உள்ள வழிகள் முழுவதும்;தூவுதண் சுண்ணமும் கனக நுண் தூளியும் - மங்கல நிகழ்ச்சிகளில் மேலே தூவப்படுகிற குளிர்ச்சி தரும் வாசனைப் பொடிகளும் (அணிகளின் உராய்வினால்) சிந்துகின்ற) பொன்னாபரணங்களின் நுட்பமான பொற் பொடிகளும்; பூவின் மென் தாது உகும் பொடியுமே - மலர்களிலிருந்து சிந்துகிற மெல்லிய மகரந்தப் பொடிகளும் ஆகிய இவையே; பொடி எலாம் - (அங்குச் சிந்திய) பல்வகைத் தூசுகள் ஆகும். உலகில். எளியவையே தூசு எனப்பட. அங்கு மதிப்பு மிக்கவையே தூசுகள் ஆயின என்க. தா இல் - குற்றமற்ற;கேடு அற்ற எனினுமாம். “தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்” (தொல். புறத். 5) இரப்போர் கடலை ஈந்தே கடந்து (கம்ப. 172). மண்ணின்மேல் வான் புகழ் நாட்டான் ஆதலின். தசரதனை. “தா இல் மன்னவர் பிரான் வர”எனறார். 12 |