கரியவன் பின்பு சென்றவன்- கருமை நிறத்தினனான இராமன் பின்னே தொடர்ந்தவனான இலக்குவனும்; அருங்காதலில் பெரியவன் தம்பி - பிறரால் கொள்ளற்கு அரியதான இராம பக்தி கொண்டவனான பரதன் பின்செல்லுந் தம்பியான சத்துருக்கனனும்; என்ற இனையதோர் பெருமை - என்ற இத்தகைய ஒப்பற்ற பெருமையுடைய; அப்பொரு இல் குமரர் இருவரும் - ஒப்பிலாத அந்தக் குமரர்கள் இரண்டு பேரும்; வந்து. தம்புனை நறும்குஞ்சியால் - அருகில் வந்து. தம் மணம்மிகும் முடிக்கொண்டு; இருவர் பைங்கழலும் வருடினார் - (முறையே பரதன். இராமன் என்னும்) இருவரது பசும்பொன்னாலான வீரக் கழலணிந்த திருவடிகளையும் வணங்கினர். பைங்கழல் - ஆகுபெயர். பரதனை இலக்குவனும். இராமனைச் சத்துருக்கனனும் வணங்கினர் என்க. பரதனது அன்பை இடங்கிட்டும் போதுஎல்லாம் உயர்த்தும் கவிஞர் பிரானின் ஆசை. “அருங்காதலின் பெரியவன்” என இங்கும் வெளிப்படல் காண்க. இராமனும். இலக்குவனும். பரதனும் சத்துருக்கனனும் பிரியாமல் வாழ்ந்ததை. “பரதனும் இளவலும் ஒருநொடி பகிராது..........எனை ஆள் வரதனும் இளவலும் என மருவினர்” (கம்ப. 307) என முன்பே உரைத்தார். 27 குமரர்கள் நால்வரும் விளங்கிய காட்சி |