கோல்வரும் செம்மையும் குடைவரும் தண்மையும் - அரசாளும் முறையில் பொருந்தின நீதியும். ஆளுகையில் (மக்கட்குக்) குளிர்ச்சி தரும் கருணையும்; சால்வரும் செல்வம் என்று உணர் பெருந்தாதை தன் - (தனக்கு) ‘மிகப் பொருந்திய செல்வம்’ என்று உணர்கின்ற பெருமைக்குரிய தந்தையாகிய தயரத வேந்தருடைய; மேல்வருந் தன்மையால் - மேன்மையை நல்கும் பண்புகளால்; பொருவு இல் நான்மறை எனும் நடையினார் - ஒப்பில்லாத நான்கு வேதங்களே இந்நால்வரும் எனச் சொல்லத்தக்க ஒழுக்கத்தையுடையவராய்; தாம் மிக விளங்கினர் - நான்கு குமாரர்களும் (தந்தையைப் போலவே) (அங்கு) மிகச்சிறந்து விளங்கினர். தசரதன் தன் செல்வம் எனக் கருதியது தன்நாட்டு மக்களுக்குக் காட்டும் நீதியும் கருணையுமே. “சதுமறையெனக் குமரர்கள் வளர்ந்தனர்” என முன்பும் (கம்ப. 302) சுட்டுவார். “அலையாழியென வளர்ந்தார் மறைநான்கும் அனையார்கள்” (கம்ப. 659) என்பதும் காண்க. இனி. “சால்வரும் செல்வம்” என்றதற்கு ஊன்றுசாலில் இடப்பட்டவிதையின் குணம் கதிரிலும் அப்படியே விளைவது போல. கோல்வரும் செம்மையும் குடைவரும் தண்மையும் மக்கட்கும் அப்படியே விளைந்துள்ளன எனக் கொள்ளினும் ஆம். ஒப்பு. “உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன்பயனே” (புறம். 35). 28. இராமனுக்குத் தயரதன் தந்த பணி |