அணி அரங்கு அயல்எலாம்- (அந்த நரகத்து வீதிகளிலுள்ள) அழகிய மண்டபங்களின் பக்கங்களில் எல்லாம்; சூடகம் துயல் வர. கோதை சோர்தர - தம் கைவளைகள் அசையவும். கூந்தல் தளர்ந்து சரியவும்; மலர்ப் பாடகம் பரத நூல் பகர - செந்தாமரை மலர் போன்ற மெல்லிய பாதங்களில் பாடகம் என்னும் காலணிகள் (நாட்டிய சாத்திரமாகிய) பரத நூலிற் கூறப்பட்ட தாளவிதி முறைகளைத் (தம் ஒலியால்) வெளிப்படுத்தவும்; வெங்கடகரிக்கோடு அரங்கிட எழும் குவிதடங்கொங்கையர் - கொடிய மதமுடைய யானைகளின் கொம்புகள் (அழகு) கெடும்பிடியாக. எழுந்து குவிந்து அகன்ற பெரிய தனங்களையுடைய மகளிர்; ஆடுஅரங்கு அல்ல - ஆடல்புரியும் நடன அரங்குகள் போல (எங்கும்) தோன்றினும் நடன அரங்கங்கள் என்று கருதவேண்டா;அவர்கள் வாழும் மாளிகைகளே அவை என்று துணிக. துணிக. வளை ஒலியும். குழல் சரிவும். காரணித் தாளமுமாகச் சூழ மங்கையர் ஒல்கி ஒசிந்து நிற்கும் இடம் எல்லாம் ஆடரங்கம் என்றே தோன்றும்; ஏமாற வேண்டா; அவரவர் மாடமாளிகைகளே எனச் சுறையுறக் கூறினார். மாளிகைகள் யாவும் அன்று மகளிர் ஆடரங்கம் போல மகிழ்வில் திளைத்தன என்பதாம். 33 |