ஆதி வானவர்பிரான் அணுகலால் - முதன்மையான தேவர்க்கும் முதல்வனாகும் திருமாலின் அவதாரமான இராமபிரான் (தங்கட்கு) அருகில் வந்தடைவதால்; பேதைமார் முதல் கடைப் பேரிளம் பெண்கள்தாம் - பேதைப் பருவத்தினர் முதலாகப் பேரிளம் பெண்ணுப் பருவத்தினர் இறுதியான மகளிர்; ஏதி ஆர் மாரவேள் ஏவ வந்து எய்தினார் - ஆயுதங்கள் நிரம்பின மன்மதன் ஏவியதனால் வந்தடைந்தவர்களால்; அணிகொள் கார் ஓதியார் - அழகமைந்த கருங்கூந்தலினையுடையவராய்; வீதிவாய் உற்றவாறு உரை செய்வாம் - (மிதிலை நகரத்) தெருக்களில் வந்து அடைந்த நிலைமையை (இனிக்) கூறுவோம். பரம பத நாதன் கைக்கெட்டுந் தூரத்தில் வந்துள்ளான் ஆதலின். ஆன்ம நாயகனைத் தரிசிக்க அத்துணைப்பருவ மங்கையரும் தெருவில் நின்றனர் என்க. உயிர்கள் ஆன்ம நாயகனிடத்தில் வேட்கை கொள்ளுதல் கற்பு வழு அன்று என்பது தோன்ற. “ஆதி வானவர்பிரான் அணுகலால்” என்றார். எழுவகைப் பருவ மங்கையர்: பேதை (5-7) ;பெதும்பை (8-11) ; மங்கை (12-13) ; மடந்தை (14-19) ; அரிவை (20-25) ; தெரிவை (26-31) ; பேரிளம் பெண் (32-40). தாமாக வரவில்லை. அழியா அழகன் வீதிவந்தடைந்துள்ளான்; போய்க் கண்பெற்ற பயன்கொள்ளுங்கள் என்று. மன்மதன் செலுத்த வந்துள்ளனர் என்பார். “மாரவேள் ஏவ வந்து எய்தினார்” என்றார். வரும் படலத்திற்குத் தோற்றுவாயும் செய்தார். 34 |