கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம்- (நம்முடைய) கண்களினாலேயே. (காட்டலாகாப்பொருளாகிய) காதல் என்னும் பொருளின் (வடிவத்தையே) இங்குக் காண்கின்றோம்; இப்பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் - (ஆதலால்) இந்தப்பெண்தன்மை கொண்டதனால் வாழ்நாளில் அடையத்தக்க. பயனை. (இவனை இப்போது கண்டதனால்) இன்றே பெற்றுவிடுவோம் என்று நினைப்பாராய்; மண்ணின் நீர் உலந்து. வானம் மழையற வறந்த காலத்து- பூமி முழுவதும் நீர் வற்றி. விண்ணில் மேகங்கள் மழை பொழியாது வறண்டு போன காலத்தில்; உண்ணும் நீர் கண்டு. வீழும் உழைக்குலம் பலவும் ஒத்தார் - பருகத்தக்க நன்னீரை. (ஓரிடத்திலே) கண்டு. அதனைக் குடித்தற்குத் தாவும் மான் கூட்டங்களைப் போன்று (மகளிர்) இராமனைக் காண மொய்த்தார்கள். பண்புப் பொருள்கள் எல்லாம் கண்ணால் காண இயலாதவை. நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்ப (தொல். பொருளியல். 51) என்பவாதலின். கண்ணால் காணவியலாத காதல் எனும் பண்புப் பொருள் மானுட வடிவம் பெற்று வந்துள்ளது; வாருங்கள்; பெண்ணாய்ப் பிறந்த பயனை இன்று பெற்று விடுவோம் என்று இராமனைக் காண மிதிலை மகளிர் ஓடினர் என்க. உலகில் தெய்விகக் காட்சி காண்டற்கு அரியதாதலின் மழை வறண்ட காலத்து. உண்ணும் நீர் கண்டுவிட்ட மான் இனத்துக்கு மகளிரை உவமையாக்கினார். 4 |