அரத்தம் உண்டு அனையமேனி அகலிகைக்கு அளித்த தாளும்- செம்மையெனும் நிறத்தையே உணவாக உட்கொண்டாற்போன்ற (சிவந்த) வடிவினையுடைய அகலிகைக்கு அருளிய (இராமபிரானின்) திருவடிகளையும்; விரைக் கரும் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும் வரைத்தடம் தோளும் - மணத்தோடு சேர்ந்த கருங்கூந்தலையுடைய சீதையைப்பெறுவதற்காக வில்லை ஒடித்து. உயர்ந்து பருத்த மலைபோன்ற தோள்களையும்; காண மறுகினில் வீழும் மாதர் - கண்டு களிப்பதற்கு (அரச) வீதியில் வந்து கூடுகின்ற மகளிர்.; இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ இனம் என்னல் ஆனார் - ஒலியெழுப்பிய வாறு வந்து. அமிழ்தத்தில் மொய்க்கின்ற வண்டுகளின் கூட்டம் என்று உவமிக்கும்படியானார்கள். கோசிக முனிவன் மட்டும் கண்டு மகிழ்ந்த இராமபிரானின் கை வண்ணத்தையும் கால் வண்ணத்தையும் (கம்ப. 475). எல்லோரும் காணும் வாய்ப்பை. மிதிலை நல்கியுள்ளதால். வாய்ப்பை நழுவ விடாது. மிதிலை நகரத்துப் பெண்கள். அமிழ்தத்தை உண்ண மொய்க்கின்ற வண்டினம் போல. இராமபிரானின் அழகு எனும் அமிழ்தத்தை உண்டு திளைக்க மொய்த்தனர் என்க. அமிழ்தம் சாவாமைக்குக் காரணமாவது மட்டுமன்றிப் பெருஞ்சுவையும் நல்க வல்லது. இறைவன் அடிசார்ந்த உயிர்கள் அழியாநிலை எய்திப் பேரின்பம் உறுதலைக் குறிப்பால் அறிவித்தார். அகலிகைக்கும் சீதைக்கும் அருள் செய்ததாளும் தோளும். நாமும் பெண்களாதலால். நமக்கும் அருள் செய்தே தீரும் எனும் நினைவில் மகளிர் மொய்த்தார் எனினுமாம். அரத்தம் - சிவப்புநிறம். 5 |