குழைஉறா மிளிரும் கெண்டை- காதணியின் மேல்சென்று ஒளிரும் கெண்டை மீன்களைப் போன்ற கண்கள்; கொண்டலின் ஆலிசிந்த- மேகங்கள் துளிகளைப் பொழிதல் போல. கண்ணீர்த்துளிகளைச் சிந்தி நிற்க; தழைஉறாக் கரும்பின் சாபத்து அனங்கவேள் சரங்கள் பாய- தழையில்லாத கரும்பினை வில்லாகக்கொண்ட மன்மதன் (மலர்க்) கணைகள் (தன்மேல்) பாய்வதனால்; புண்அறாத - புண்கள் நீங்காத; இழை உறா இளமுலை ஒருத்தி சேர்ந்து - நூல் இழை நுழையும் அளவும் வெற்றிடம் இல்லாத இளைய தனங்களையுடையாள் ஒருத்தி. தளர்ந்தவளாய்;மழை உறா மின்னி அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் - மேகத்தில் உதிக்காமல் (மண்ணில் உதித்த) மின்னற்கொடி போன்ற (தனது) இடையினைப் போலவே (மற்றையங்கங்களும் இளைத்து) (இராமன் சென்றுவிட்டதனால்) சோர்ந்து போய் நின்றாள். மழை உறா மின்: தழைஉறாக் கரும்பு - இல்பொருள் உவமைகள். இடையைப்போல. உடல் முழுதும் இளைத்தது என்றதனால். இடையின் இளைப்பை உய்த்துணர்க. என்பது குறிப்பு. “மென்மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்”. (கம்ப. 5072) என்பார் மேலும். 9 |