பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங்கண்கள் எல்லாம்- செம்பஞ்சுக்குழம்பை அணிந்த (மெல்லிய) விரலினையுடைய அப்பெண்டிரின் வாள் போன்ற கண்கள் யாவும்; செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோதாம்? - இராமபிரானின் உடலின் கருமையை அவை அடைந்தனவோ?; மஞ்சு அன மேனியான்தன் மணிநிறம் - (அல்லது) மேகத்தை ஒத்த மேனியான் ஆகிய இராமபிரானின் அழகிய நிறம்; மாதரார்தம் அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ? - பெண்டிரின் அஞ்சன மையிட்ட கண்கள் (அவனது திருமேனியில்) மொய்த்துக் கிடந்தமையால் அது கருமையையடைந்ததோ?; அறிகிலேமால் - (இவ்விரண்டில் எது நிகழ்ந்தது? என) எம்மால் துணிந்து அறியக் கூடவில்லை. ஐயனின் மேனியும் அரிவையர் விழிகளும் நிறத்தில் ஒன்றுக்கொன்று கொண்டு கொடுத்துக் கொள்ளும் தகுதியுடையனவாய் இருந்தன என்பது கருத்து. பெண்கள் தம் கண்கள் அவன் திருமேனியில் ஊன்றிக்கிடந்தன என்பதாம். பஞ்சு அணி விரலினார் - செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பட்ட விரலினையுடைய மகளிர். 10 |