பொன்னையும் பொருவும் நீராள்- (மகளிற் சிறந்தவள் ஆகிய) திருமகளைத் தனக்கு உவமையாகக் கூறத்தக்கவள் ஆகிய ஒருத்தி; புனைந்தன எல்லாம் போக்கி - தான் அணிந்திருந்த அணிகலன்கள் யாவற்றையும் தன் உடல் இளைப்பால் கழன்று போக விட்டு; தன்னையும் தாங்கலாதாள் - தன் உடலையும் தான் தாங்கும் வலிமையற்றவள் ஆகி நிற்கையில்; துகில் ஒன்றும் தாங்கிநின்றாள் - (மானம் மிக்கவள் ஆனபடியால்) தன் ஆடை ஒன்றைமட்டும் (அவ்வணிகள் போல்) நழுவி விடாதபடி தாங்கிப் பிடித்து நின்றாள்; சொல் நலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி - (அவள் அப்படிப் பிடித்துக் கொண்டு) சொல் நலத்தால் அகப்படாத அகப்பொருளாகிய காமத்தின் சுவை முழுவதற்கும் ஒருவடிவம் கொடுத்து; இன் நலம் தெரியவல்லார் எழுதியது என்ன நின்றாள் - இன்ப (நூல்) நலம் தெரிந்த வல்லவர்கள் எழுதிய ஓவிய வடிவம் இது என்னுமாறு நின்றாள். கட்புலனாகாத காமச்சுவையைக் கட்புலப்படுத்த வந்த உயிர் ஓவியம் அவள் என்க. அன்றைய ஓவியக்கலையின் ஆட்சியும் மானம் பேணலின் மாட்சியும் ஒருங்கு தெரிவித்த வாறு. செல்லுக்குள் அகப்படாத சுவையுடையது காமச்சுவையே ஆதலின். “சொன்னலங்கடந்த காமச்சுவை” என்றார். அகம் என்று காதற்சுவை பெயர்பெறக் காரணமும் இதுவே என்பர். “மகட்குத்தாய் தன்மணாளனோடு ஆடிடும் சுகத்தைச் சொல் எனில் சொல்லுமாறு எங்ஙனே?” 12 |