கொற்றம்செய் கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள் ஓர் தோகை - வெற்றியைத் தரும் கொல்லும் செயலையுடைய (கூர்) வேல்போலவும். கூற்றுவன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில்போல்வாள் ஒரு மங்கை; வில் தங்கு புருவம் நெற்றி வெயர்வர. பசலை விம்மிச் சுற்று எங்கும் எறிப்ப- வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும். நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்) பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும்; உள்ளம் சோர நின்றாள் மற்றொன்றும் காண்கிலாதாள் - தன்மனம் தளரவும் நின்றவளாய். தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால். அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய்; ‘வள்ளல் தமியனோ’ என்றாள் - வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாள். ஒன்றில் ஊன்றிய மனம் பிறவற்றைக் காணாது என்னும் உளவியல்பால். அவன்தனிமைகண்டு இரங்கினாள்; தனியன் ஆயின். தழுவி மகிழ்தற்காகவும் வினவினாள் எனலுமாம். இராமன் தனக்கு அருளவே தனியாக வந்துள்ளான் எனக்கொண்டு. அவனை “வள்ளல் என்றாள். ஐந்து பேரறிவும் கண்களே கொள்ளும் நிலையுற்ற அவள் கண்களை. இராமன் வடிவு ஒன்று மட்டுமே கொள்ளை கொண்டுள்ளதனால். நால்வகைப்படைகளும். மகளிரும். மைந்தரும் கண்ணில் படாது போயினர். “காமத்திற்குக் கண்ணில்லை” எனும் வழக்கும் காண்க. 13 |