உருகுகின்றவளாய். (தன் தோழியை நோக்கி); ‘தோழி! நெஞ்சிடை வஞ்சன் வந்து புக்கனன் - (என் உயிர்த்) தோழியே! வஞ்சகனாகிய இராமன் என்நெஞ்சினுள்ளே (கண்வழியாக வந்து) உட்புகுந்து அகப்பட்டுக்கொண்டான்; போகாவண்ணம் கண் எனும் புலம்கொள் வாயில் சிக்கென அடைத்தேன்- அவன் இனி வெளியேறிவிடாதபடி என் கண் இமைகளை அவன் உள் நுழைந்த வாயிற்கதவைச் சிக்கென அடைத்துவிட்டேன்; அமளிசேருதும் என்றாள் - (எனக்கு வழிகாட்டு) அவனை நுகர்தற்கு மஞ்சம் சேர்வேன் என்று கூறினாள். தலைவி. கண்களை மூடிக்கொண்டதனால். தோழியின் உதவியை நாடினாள். உரியவர் அறியாது நெஞ்ச வீட்டுள் புகுந்து. அங்கிருந்த நாணம். நிறை முதலிய உயர் பொருள்களைக் கவர்தலால் இராமன் வஞ்சன் ஆனான். ‘கண் விழி நுழையுமோர் கள்வனே கொலாம் (கம்ப. 535) என்பார் முன்னும். “தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினும் என்கண்திறந்து காட்டேன் - வளை கொடுபோம். வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னொடும் வந்து என்கண் புகுந்தான் இரா” எனும் முத்தொள்ளாயிரம் 38 இங்கு நினையற்பாலது. 14 |