ஊடு பேர்வு இடம் இன்னி - (இருந்த) இடத்திலிருந்து நிலை பெயர்ந்து நகர்தற்குரிய இடைவெளி சிறிதும் இன்றி; நீடு மாகடல் தானை நெருங்கலால் - நீண்ட பெருங்கடல் போன்று (தசரத வேந்தனின்) படைத்தொகுதி (அந்நாட்டிடம் முழுவதும்) நெருங்கிப் பரவி நிற்றலால்; ஆடல் மாமத ஆனைச் சனகர் கோன் நாடு எலாம் - வெற்றியினையே ஏந்தும் பெரிய மத யானைப்படைக்குரிய சனக மன்னனின் (விதேக) நாடு முழுவதும்; ஒரு நல் நகர்ஆயது - (சன நெருக்கம் மிக்க) ஒரே ஒரு நல்ல நகரமாக ஆய்விட்டது. கவிஞர்பிரான் தன் கற்பனைத் திறத்தால். நாட்டை ஒரு நகரமாக்கி மகிழும் திறம் காண்க. போதுமான இடமின்றி நெருங்கியிருத்தலும். படைகள் மிக இருத்தலும் நகரத்தின் இயல்பாய் அன்றும் இருந்திருத்தல் காணலாம். நாட்டும்புறம் இவையிரண்டுமின்றியிருத்தல் இன்றும் இயல்பாதல் காண்க. 53 |