உரை செய - (இவ்வாறு) வசிட்ட முனி சொல்லியருள; தொழுத கையன். உவந்த உள்ளத்தன் - (அது கேட்டு) கூப்பி வணங்கிய கரங்களையும். மகிழ்ச்சி பொங்கிய மனத்தையும் உடையவனான சனக மன்னன்; பெண்ணுக்கு அரசியைத் தருதிர் ஈண்டு என்று ஆயிழையவரை ஏவ - பெண்ணினத்தின் பேரரசியாம் (பெருமாட்டியான) சீதையை இங்கே அழைத்து வாருங்கள் என்று ஆய்ந்தணிந்த அணிகளையுடைய மங்கையர் சிலரிடம் ஆணையிட; பிரைசம் ஒத்து இனிய சொல்லார் - தேன் அனைய இன்சொல் பேசும் அப்பெண்கள்; கரை செயற்கு அரிய காதல் கடாவிடக்கடிது சென்றார் - அளவிடற் கரியதாய்ச் (சீதை மேல் உள்ள) அன்பு உந்தித்தள்ள விரைந்து சென்றவர்களாய்; பேதை தாதியரில் சொன்னார் - இளைய பருவத்தினளான சீதையின் தோழியரிடம் அச்செய்தியை (உடனே) போய்ச் சொன்னார்கள். கவிஞர்பிரான் அரண்மனை நடைமுறைகளை நன்கறிந்தவர் என்பதனை இப்பாவும் உணர்த்தும். ஆணைகளை முறைப்படி ஒருவர். தமக்குக் கீழ் இருக்கும் ஒருவர்க்கு உரைக்க. அவர் அவர்க்குக் கீழ் இருப்பாரிடம் உரைக்கும் முறை பண்டே யிருந்தமை இப்பாடலால் தெளியலாம். மாமுனி வசிட்டனின் ஏவல் |