அமிழ் இமைத்துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்கு மாபோல் - (கண்கள்) மறைதற்குக் காரணமான இரண்டு இமைகளும் அக்கண்களுக்கு அழகென்று (இறைவனால்) அமைக்கப்பட்டிருப்பது போல; உமிழ் சுடர்க் கலன்கண் நங்கை உருவினை மறைப்பது ஓரார் - (சீதைக்கு அணிசெய்யும் மகளிர்) ஒளிவீசும் ஆபரணங்கள் சீதையின் (அழகிய) வடிவத்தை மறைக்கும் என்னும் உண்மையை உணராதவர்களாய்; அமிழ்தினைச் சுவை செய்தென்ன - (இயல்பாகவே) (அத்துணைச் சுவைகளையும் பெற்றிருக்கிற) அமிழ்துக்கு. (கற்கண்டு சர்க்கரை முதலியவை கொண்டு) மேலும் சுவை கூட்டும் முயற்சியைப் போல; அழகினுக்கு அழகு செய்தார் - (இயற்கையிலேயே) பேர் அழகுவாய்ந்த (சீதையின் உறுப்புகளுக்கு) (மேலும் புதிதாக) அழகு செய்யத் தொடங்கினார்கள்; இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து - அலை ஒலிக்கும் கடல்சூழ்ந்த இந்நிலவுலகத்து மக்கள் (நன்மை புரிவதாக நினைத்துப் பிழைபுரியும்) அறியாமையுடையவர்கள். மாது. ஓ - அசைகள். நினைக்கும் நினைவு நல்லதாயினும். அதற்கு மாறான செயல் புரியத் தொடங்குதல் பேதைமை. சீதைக்கு அணிசெய்யக் கருதுதலின் மேல் வைத்து அப்பண்பினை விளக்கியவாறு. பிறமகளிர் அணி தரித்து அழகு செய்வர். சீதை அணி பறித்து அழகு செய்வாள் என (கம்ப : 6991) அவள் அழகின் பெருமை அறிவித்தவாறு. “அணிகலம் அணிவோர் அணியிலோரே.... இவள்போல் உறுப்பே அணிகலமாக உடையோர்” (பெருங். 4:17) ஏழைமை. அறியாமை குறித்து நின்றது. “செய்யாக் கோல மோடு வந்தீர்” (சிலப் 16:11) எனக் கண்ணகியின் அணியா அழகு புகழப்படும். 3 |