கணங்குழை- திரண்டு ஒருங்கிருந்த குழைகளையுடைய சீதை; கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான் வணங்குவில் இறுத்தவன - தான் கன்னிமாடத்திலிருந்து கண்ட நாள் முதலாகத் தன் மனத்துள்ளே தங்கிய கள்வனாயிருந்த அவனே வளையும் வில்லை முறித்தவனானான்; எனத் துயர் மறந்தாள் - என்று (ஐயத்திற் கிடமின்றி அறிந்து) (முன்பு தான் கொண்டிருந்த ஐயத்தாலான) துயரம் முழுவதையும் மறந்தவள் ஆனாள்; அணங்குறும் அவிச்சை கெட - (பிறவித்) துன்பம் அடைவதற்குக் காரணம் ஆன (ஒன்றை இன்னொன்றாக உணரும்) விபரீத உணர்வு அழிந்தவுடன்; விச்சையின் அகம்பாடு உணர்ந்து - தத்துவ அறிவு எழுவதால். கிட்டும் உண்மை ஞானத்தால்; மனத்தில் வாழும் பரம்பொருளை அகக் கண்ணால் கண்டுணர்ந்த பின்பு; அறிவுமுற்று பயன் உற்றவரை ஒத்தாள்- முற்றறிவால் எய்தும் (முத்திப்) பயனாம் அந்தமில் இன்பத்தை அடைந்தவரைப் போன்றவளானாள். இம்மூன்று பாடல்களாலும். “வில் ஒடித்தவனே அன்று கண்ட வீரன்” என்று ஐயமின்றி அறிந்ததனால் எழுந்த சீதையின் உள. உடல் விகசிப்பையே கூறிச் சீதை மகிழ்வதாகக் கவிஞர் மகிழும் திறம்உணர்க. வேற்றவன் ஆனால். சீதை கொண்ட முதற்காதல் முழுதும் பழுதாகும் என்று அவள் தவிப்பை வெளிப்படுத்தி. சீதையின் தகவை வெளிப்படுத்தியவாறு. “சொல்லிய `குறிப்பின் அத்தோன்றலே; அவன் அல்லனேல் இறப்பன் (கம்ப. 728) என அவள் கூற்றையும் உணர்க. |