அன்னம் அரிதின் பிரிய- அன்னப் பறவை அனைய சீதை. இராமனைப் பிரியமனமின்றிப் பிரிந்த பின்பு; அண்ணலும் அகன்று ஓர் பொன்னின் நெடுமாடவரை புக்கனன் - அவ்வாறே இராமனும் சீதையைப் பிரிய மனமின்றி அம்மண்டபத்தினின்றும் அகன்று பொன்மயமான மலைபோன்ற (தனக்குரிய) மாளிகையைச் சென்றடைந்தான்; மணிப்பூண் மன்னவர் பிரிந்தனர்கள் - மணியாபரணங்களை யணிந்த மன்னவர்களும் பிரிந்து. தத்தமக்குரிய இருப்பிடங்களைச் சென்றடைந்தனர்; மாதவர்கள் போனார் - பெருந்தவ முனிவர்களும் சென்றார்கள்; மின்னுசுடர் ஆதவனும் மேருவில் மறைந்தான் - ஒளிமின்னுகின்ற கிரணங்களையுடைய கதிரவனும் (பிரியமனமின்றி) மேருமலைக்கு அப்பாற் சென்று மறைந்தான். இயல்பு நவிற்சியிலும் தனியழகு தோன்ற உரைக்கும் கவிஞர் பிரானின் திறத்தை இப்பாடலிலும் காணலாம். தயரதன். இராமன் முதலிய தன் குலத்தோன்றல்கள் இருப்பிடம் அடைய. தானும் தன் ஓய்விடம் அடைவான்போல. மேருமலையில் கதிரவன் மறைந்தான் என்றார். தன்குலத் தோன்றல்களின் மகிழ்ச்சிப் பெருக்கைக் காண அவர்கள் இருக்கும்வரை வானில் இருந்தான் என்பது கருத்து. சூரியன் கிழக்கே உதயகிரியில் தோன்றி. மேற்கே அத்தமனகிரியில் மறைவதாகக் கூறுவது கவிமரபு ஆகும் 43 |