இராமபிரானுக்கும் சானகிக்கும் நிகழ்ந்த திருமணம்பற்றிய நிகழ்வுகளைக் குறிக்கும்பகுதி எனப் பொருள்படும். (கடி-சிறப்பு. உரிச்சொல்). மிதிலையில் அனைவரும் மகிழ்வில் திளைத்திருக்க. இராமனும் சீதையும் காதல் வேட்கையால் துயர் உறுகின்றனர். மணமுரசு அறைகிறது. நகரம் அணிபெறுகிறது. அழகிய மணமண்டபத்தில் தரசதன் முதலிய அனைவரும் குழுமுகின்றனர். மங்கல நீராடி மணக்கோலம் பூணுகின்றான் இராமபிரான். தேர்ஏறி மண்டபம் அடையுங்கால். வானத்துத் தேவர்கள் வாழ்த்தெடுக்கின்றனர். சீதையும் மணமண்டபம் அடைய. வசிட்டன் மணச்சடங்குகள் புரிகின்றான். தீவலம் செய்து. அம்மி மிதித்து அருந்ததி பார்க்க மணச்செயல்கள் இனிதே நிறைவுறுகின்றன. மாமியாரைச் சீதை வணங்க. அவர்கள் ஆசியும் அரும் பொருளும் பரிசாக அளிக்கின்றனர். இராமன் சீதையுடன் பள்ளியடைகிறான். வசிட்டன் மங்கல நெருப்பினை வளர்க்க. தம்யியர் மூவர்க்கும் மணம் நிகழ்கிறது. தரசதனும் சனகனும் விரும்புவார்க்கு விரும்புவன எல்லாம் அள்ளிக் கொடுத்து மகிழ்கின்றனர். தசரதன் சில நாட்கள் மிதிலையிலேயே தங்கிச் சிறப்பிக்கிறான். நாட்கள் சில மெல்ல நகர்கின்றன. |