தேட அருநலத்த னல் ஆசை தெறல் உற்றார்- தேடிப்பெறுவதற்கு அரியதான தூய நீரைப்பருகும் வேட்கையால். வருத்தமுற்றவர்கள்; மாடு ஒர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் - அருகிலேயே ஒரு நீர்நிலை இருக்கக்கண்டும். அந்நீர்நிலையில் (இறங்கும் படிகள் இன்மையால்) அதனை அடையும் வழிவகை காணாதவராயின்.; ஈடு அழிவுறத் தளர்வொடு ஏமுறுவர் அன்றே? - தம் வலிமை குன்றிச் சோர்வுற்றுக் கலக்கம் அடைவார் அன்றோ?; ஆடக வளைக் குயிலும் அந்நிலையள் ஆனாள் - பொன்னலான வளையல்கள் அணிந்த குயில் போன்ற பிராட்டியும் அந்த நிலையினையடைந்து (இராம வேட்கையால்) தவித்துக் கலங்கினாள். “நீர் இன்றி அமையாது உலகு” (திருக். 20) ஆதலின். “தேட அரு நலத்த புனல்” என்றார். மாற்றுத் தேடற்கு அரியதான புனல் எனினுமாம். இராமபிரான் எனும் அழகின் தடாகம் அருகிலிருந்தும் திருமண நிகழ்வுகள் முற்றுறாமையால். சீதை நுகர இயலாமல் தவித்த தவிப்பை அழகுற விளக்கியவாறு. உவமையணி. ஓர் என்பது சந்த இன்பம் நோக்கி ஓர் என ஆயிற்று. பின் முன் வருவனவற்றிற்கும் இவ்வாறே கொள்க. ஏம் உறல் - கலக்கமுறல். வளையல் அணிந்த மணிக்குயில் ஒன்றிருந்தால். பிராட்டிக்கு உவமையாம் என்பார். “ஆடக வளைக்குயில்” என்றார். இல்பொருள் உவமை. ஆடகம்-கைவளை. 2 |