இருளானது தான் - (இங்குச் சூழ்ந்துள்ள) இருள் என்று சொல்லப்படுவதுதான்; தெருளா வினை தீயவர் சேர் நரகோ - தெளிவற்ற பாவச் செயல்களைச் செய்வார் சென்றடையும் நரகமே தானோ? (இந்த இருளில்); அவா அதுவோ அருளான் நெறி ஓடும்- என்னுடைய காதல் வேட்கையோ. என்னிடம் இன்னும் அருள் காட்டாதவனாகிய இராமன் இருக்கும் இடமே நோக்கி ஓடுகின்றது!; கருள் சேர் கடலோ? - (விடிந்தால் அவனை அடையலாம் எனில்) (இந்த இரவோ) கருமை நிறைந்து (எல்லையற்ற தாதலின் கடல் என முன்நிற்கிறது); கரை காண்பு அரிதால் - (இவ்விரவு எனும் கடல் மெல்லியலாள் ஆகிய நான்) நீந்திக் கடந்து கரை காண்பதற்கும் அரிதாகிறது; எனை ஊழி கொல் ஆம்? - எத்தனை ஊழிக்காலம் சேர்ந்து (இந்த ஓர் இரவு) ஆகியுள்ளது? பிரிவில் தவிப்பார்க்கு ஒரு நொடியும் ஒரு யுகமாகத் தோன்றும் ஆதலால் “எனை ஊழி கொலாம்” என்று பிராட்டி தவித்தனள் என்க. எனை - எத்தனை. “ஒருநாள் எழுநாள் போல் செல்லும் சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு” (திருக். 1296) எனும் கூற்றையும் ஒப்பிடுக. கடல் நீந்தற்கு அரியது என்பாள் “இருள் கருள் சேர் கடல்; கரை காண்பு அரிது” என்றாள். “காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன்; யாமத்தும் யானேயுளேன்” (திருக் 1167); “இன்பம் கடல் மன்னும் காமம்; அஃது அடுங்கால். துன்பம் அதனில் பெரிது” (திருக். 1166). 9 |