இடம்படு தோளவனோடு - இடம் அகன்ற தோளினனான இராமனோடு; இயை வேள்வி தொடங்கிய - அவ்வச்சயமத்திற்கு ஏற்றவாறு ஓமம் முதலிய வைதிகச் சடங்குகளைச் செய்வதற்காகத் தொடங்கப் பெற்ற; வெம்கனல் சூழ்வரு போதின் - வெம்மையுடைய (வேள்வித்) தீயைச் சுற்றி வருகின்ற பொழுதில்; மடம்படு சிந்தையள் - (பெண்மைக்குரிய) பேதைமைக் குணம் (இயல்பாய்) அமைந்தமனத் தினளான சீதை; மாறு பிறப்பின் உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள் - மாறி மாறி வருகின்ற இயல்பினையுடைய பிறவிகளில் (உயிர் உடம்பைத் தொடர்கின்ற வழக்கத்திற்கு மாறாக) உடம்பு உயிரைத் தொடர்கின்றதைப் போல. இராமனைப் பின் தொடர்ந்தாள். உயிர்தான். தான் நுகரவுள்ள வினைகட்கேற்ற உடலைப் பெற்று. பிறவி தோறும் உடலைப் பின் தொடரும் வினைகள் அற்ற தெய்விகத் தம்பதியர் ஆதலின். “உடம்பு உயிரைத் தொடர்ந்தது” போல் சீதை இராமனைப் பின் தொடர்ந்தாள் என்றார். இல்பொருள் உவமையணி. மடம்: பெற்றோரும் கணவனும் கற்பித்தபடி வழுவாது ஒழுகும் குணம். கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்பர். இக் குணச் சிறப்பால் இராமன் ஆகிய உயிர் செல்வழியெல்லாம் இனிச் செல்ல இருப்பவள் என்பது உணர்த்தினார். 90 அம்மி மிதித்து அருந்ததி காணல் |