ஆர்த்தன பேரிகள்- அப்பொழுது மங்கல பேரிகைகள் முழங்கின; ஆர்த்தன சங்கம் - சங்க வாத்தியங்கள் முழங்கின; ஆர்த்தன நான்மறை - நான்கு வேதங்களும் முழங்கின; ஆர்த்தனர் வானோர்- தேவர்கள் (ஆனந்தத்தால்) முழங்கினர்; ஆர்த்தன பல்கலை - பல் வகைக்கலைகளும் ஆர்ப்பரித்தன; ஆர்த்தன பல்லாண்டு - பல்லாண்டு இசைகள் (எங்கும்) ஒலித்தன; ஆர்த்தன வண்டு இனம் - (மலர் மாலைகளில் மொய்த்த) வண்டினங்களும் (இம்மகிழ்ச்சி வெள்ளத்தில் பங்கு கொள்பவைபோல்) ஆரவாரித்தன; ஆர்த்தன வேலை - கடல்களும் (மகிழ்ச்சியில் பங்குபெற்று) ஆர்ப்பரித்தன! உலகுக்கு நலம் விளைக்கும் பெருநிகழ்வுகள் நிகழுங்காலத்தே. இயற்கைக் கூறுகளும் பங்குபெறும் எனக்குறிக்கும் இலக்கிய மரபு பற்றி. அறந்தலை நிறுத்த வந்த மணம் இதுவாதலின். “ஆர்த்தன வண்டினம்; ஆர்த்தன வேலை” என்றார். சொற்பொருட் பின்வருநிலையணி. 93 அன்னையரை வணங்குதல் |