பங்குனி உத்தரம் ஆன பகல்போது- பங்குனி மாதத்து உத்திர நட்சத்திரம் கூடியுள்ள பகற் பொழுதிலே; ஆயிர நாமச் சிங்க மணத்தொழில் செய்த திறத்தால் - ஆயிரந்திருப்பெயர்களையுடைய சிங்கமே போன்ற இராமனது திருமணச் சடங்குகளைச் செய்து முடித்ததிறங்கூடிய; வசிட்டன் - வசிட்ட மாமுனிவன்; அங்க இருக்கினில் மங்கல அங்கி வளர்த்தான் - உப அங்கங்களையுடைய. வேதவிதிப்படி. மங்கலகரமான ஓமாக்கினியை வளர்த்தான். “தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்” (திருவாய். 8.1.10) என்பவாதலின் ஆயிர நாமச் சிங்கம் என்றார். உத்திர நாளோடு கூடிய பௌர்ணமியன்று திருமணம் நிகழ்ந்து முடிந்தபின் மணவேள்வியைத் தொடங்கிய வசிட்டபகவானே அதனை மங்கலமாக முடித்து வைத்தான் என்க. இராம நாமம் ஒன்றே. திருமாலின் ஆயிரம் நாமங்கட்கும் சமம் என்பது சகச்சிர நாமத்தின் இறுதித் துதியாதலால். “ஆயிர நாமச்சிங்கம்” என்றார் எனினுமாம். மங்கல அங்கி வளர்த்தல் வேள்வியில் மங்களகரமாக ஓமத்தீப் பொங்கியெழுமாறு பூரணாகுதி வழங்கல். 99 |