எள்ளல் இல் கொற்றவன்-பழிப்பில்லாத வெற்றிகளையே கொண்ட சனகன்; எம்பி அளித்த அள்ளல் மலர்திரு அன்னவர்தம்மை - என்பின் பிறந்தவனான தம்பி (குசத்துவசன்) பெற்ற. சேற்றில் மலரும் செந்தாமரையில் வாழும் திருமகள் அனைய மகளிரையும்; கொள்ளும் என - மணஞ்செய்து கொள்ளுங்கள் என்று; வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும் - வரையாது அருளும் இராமபிரானது தம்பியராகிய. பரத இலக்குவ. சத்துருக்கனர்க்கும்; தமரோடு குறித்தான் - (தசரத சக்கரவர்த்தி முதலிய) உறவினர்களோடு மணம் பேசி நிச்சயித்தான். சீதையை வளர்த்தபின் சனகனுக்குப்பிறந்த பெண்ஆகிய ஊர்மிளையை இலக்குவனுக்கும். தம்பி மகளிராகிய மாண்டவியைப் பரதனுக்கும் சுருதகீர்த்தியைச் சத்துருக்கனனுக்கும் நிச்சயித்தனர் என்பது முதனூலால் பெறப்படும். 100 |